rss
email
twitter
facebook

Thursday, March 8, 2012

உளரல்...


வாழ்வின் எல்லாத் துயர அனுபவங்களின் பிடியிலும் காலம் கக்கிசப்பட்டதில்லை. நாம்தான் ஒடிந்து போகிறோம். பூவின் வாசத்திலேனும், நாரின் நாற்றம்மறக்கடிக்கப்படும் என்ற நம்பிக்கைதான் வாழ்வின் ஆதாரம் என்பது உணரப்பட்ட போதும், நாரின் நாற்றத்தில் உணர்தலின் வலிமை வலுவிழந்துவிடுகிறது. வலி மிகுந்த அனுபவங்களை வாரி வரித்துக் கொள்வது நாமேதான் என்பதை நனவு மனம் ஒத்துக்கொள்வதாயில்லை. வலித்தால் அழுகிறேனா? அழுவதால் வலிக்கிறதா? என்பதை ஆய்வு செய்து பார்க்க சிக்மன் பிராய்டாகவோ, அல்லது அட்லர், யுங் ஆகவோ நான் இருந்திருக்க வேண்டாமா? இப்போதுமென்ன இந்த உளவியல் சுவாசிப்புகள் என் ஒவ்வொரு கலங்களுக்குள்ளும் உயிர் பெற்று வாழ்வதானது எங்கோ ஒரு மூலையில், என்றோ ஒரு நாள் அவர்களைத் தாண்டி எனது வாசிப்புகள் தலை நிமிர்த்தும் என்பதற்குஅத்தாட்சிகளாகவே படுகின்றது. வீழ்தலின் வெற்றியும், வாழ்தலின் தோல்வியும் சலனமற்ற அக உணர்வுகளால் ஆளப்படுகின்றதென்பதை எப்படியும் உணரச்செய்ய வேண்டி தவம் புரிகின்றேன். தவம் தனிமையின் புகலிடம் என்பதை எந்தக் கோணத்தில் அலசிப்பார்ப்பது. தனிமைதான் பற்பல ஆடைகளோடு உலவுகின்றதே. யாருமில்லாமல் தனிமையிலும், எல்லோருமிருந்தும் தனிமையிலும் என்னால் வாழ முடிகின்ற போது, மரத்தடியோ, மலையுச்சியோ அவசியப்படாது போகின்றன.இருந்தும் எல்லோருமிருந்தும் தனித்திருப்பதன் இரைச்சல்கள் பல சந்தர்ப்பங்களில் வடம் ஆகவும், பின்னர் பாடமாகவும் அமைந்துவிடுவது ஆச்சரியத்தையே தருகிறது. கன நேர சிந்தனையின் பெருத்த உருவ விளைவுகள் எனக்குப் பயத்தையும் சில நேரம் பேரானந்தத்தையும் தருவதைப் போல. என்னை நானே வெல்லும் போட்டி ஒரு மாபெரும் யாகமாகத் தொடர்கிறது.பற்பல சிறு வெற்றிகளுடனும், சிற்சில பெருந் தோல்விகளுடனும். இங்கு தோற்பவனும் நான் ஆகவும், வெல்பவனும் நான் ஆகவும் இருப்பதால் நான் செத்து செத்து விளையாடும் இந்த விளையாட்டுக்கும் சாஸ்வதமாகிய நான்தான் பொறுப்பு

Thursday, May 12, 2011

வானத்தில் அரங்கேறும் பார்வையாளன்-படைப்பாளன் சண்டை!



சினிமா என்பது வெறும் பொழுது போக்கும் சாதனம் என்ற வெகுஜன பார்வைக்குள் தமிழ் சினிமா கட்டுண்டு தனக்கான வாழ்வு,பண்பாடு,சலாசாரம், உரிமை...போன்ற இன்னோரன்ன கூறுகளைச் சிதைத்து பணம் பார்க்கும் வியாபார ஊடகமாய் உருப்பெற்றிருப்பது வேதனையளிக்கிறது. ஒரு நல்ல சினிமாவானது தனி மனிதனின் உள்ளார்ந்த உணர்வுகளோடு பேசவல்லது. பார்வையாளன் தன்னையும் தான் சார்ந்த சமூகத்தையும் சரி பார்த்துக்கொள்ள ஒரு சினிமா பயன்படுமாயின் அதுவே மாற்றம் நிகழுவதற்கான முதற்படியாக அமைந்து விடும். சினிமா என்பது பலபேர் சேர்ந்து காணும் ஒரே கனவு தானே. படம் பார்த்துவிட்டு திரையரங்கத்தை விட்டு வெளியேறுகின்ற பார்வையாளன் மனச்சுமை கூடியோ அல்லது குறைந்தோ வெளியேறாமல்,திரையரங்கத்திற்குள் நுழையும் போதிருந்த அதே மனநிலையுடனே திரும்புவானாயின் அந்த திரைப்படம் உயிரும், உணர்வுகளுமற்ற ஒரு பிணத்தையொத்ததாகவே இருந்திருக்கும். தமிழ்த்திரைப்படங்களில் பலவும் இந்த வகையறாக்களே. வேற்று மொழித் திரைப்படங்கள் அந்தந்த மொழியினதும், நாட்டினதும், மக்களினதும் அடையாளமாக இருக்கும் போது தமிழ் சினிமா தாழ்ந்த ரசணையின் குறியீடாக இருக்கின்றது. அன்றிலிருந்து இன்று வரை தமிழ்ப்படங்கள் கதை சொல்ல விளைகின்றதேயொழிய இயல்பு நிலையை அப்படியே காண்பிக்க முனைந்ததில்லை. காகம் சிவப்பாக விரும்பி தன் உடல் முழுவதும் காயப்படுத்திக்கொண்டதைப் போன்றுதான் தமிழ்சினிமாவும் அழிந்து கொண்டிருக்கிறது. அவ்வப்போது நம்பிக்கை தரக்கூடிய திரைப்படங்கள் தமிழ்மொழியில் வெளிவந்தாலும் தமிழ் திரைப்படங்களுக்காகவே பிரத்தியேகமாக உருவாக்கி வைத்திருக்கும் திரை மொழிக்குள் அவை சிக்குண்டு தரமிழந்து போகின்றன. படத்திற்கான கருவினால் மாத்திரமன்றி, திரைக்கதைக்கான சட்டகத்தாலும் தமிழ்த் திரைப்படங்கள் உணர்வுகளை தொலைக்கின்றன. படத்தின் தொடக்கம், கதாநாயகன் கதாநாயகி அறிமுகம், பாடல்கள்,சண்டைக்காட்சி, நகைச்சுவைக்காட்சிகள், அழுகைக்காட்சிகள்.... என வலிந்து திணிக்கப்படுகின்ற பெரும்பான்மைக் காட்சிகளுக்குள் எங்கே உணர்வு இருக்க முடியும். தத்துவத்தைகூட ரீமிக்ஸ் பண்ணி கேட்பவர்களாச்சே... இப்படிப்பட்ட மலிவான ரசணையாளர்களாகவே ரசிகர்கள் இருக்கும் போது நாங்கள் என்ன செய்ய முடியும் என்ற படைப்பாளிகளின் குமுறல் சத்தம் தொன்று தொட்டு கேட்டுக் கொண்டுதானிருக்கின்றன. நிஜமாகவே படைப்பாளிகள் கூறுவதைப் போன்று தமிழ் ரசிகர்கள்; மலிவான ரசணை கொண்டவர்களாக இருக்கிறார்களா? அல்லது படைப்பாளிகள்தான் தங்களின் திரை உருவாக்கத்தினூடாக ரசிகர்களுக்குள் மலினமான ரசணைகளை வளர்க்கின்றார்களா? என்ற விவாதத்துக்கு ஓரளவு விடை கிடைத்த திருப்தி அண்மையில் கிரிஸ் இயக்கத்தில் வெளிவந்த 'வானம்' திரைப்படத்தை பார்த்த போது ஏற்பட்டது.

நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழில் வெளிவந்த கருத்துச் செறிவும்,சமூக அக்கறையும் பொதிந்த ஒரு திரைப்படமாக 'வானம்' திரைப்படத்தை சொல்லலாம். பணத்தினால் ஒவ்வொரு மனிதனினதும் சுயத்தின் சாயம் அழிந்தொழிந்து போவதையும், மனித மனங்களில் கடவுள்கள் வரிசை கட்டி நிற்கும் அளவுக்கு மனிதம் துளியும் இல்லாது போனதையும் நெஞ்சை அரிக்கும் விதமாக சொல்கிறது படம். வெறுமனே இவற்றை மாத்திரம் தான் படம் பேசுகின்றது என்பதும் தவறு. தனக்குத் தீங்கிழைத்தவனை மன்னிக்கும் மனதிலும், தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கும் மனதிலும் கடவுள் வாழ்கின்றார் எனும் தத்துவத்தையும் எடுத்தியம்புகிறது. எந்தவொரு மதத்தையும் பயங்கரவாதத்தின் மதமாகப் பார்க்க வேண்டியதில்லை.அந்த மதத்தைச் சார்ந்த அனைவருமே தீவிரவாதிகளுமல்ல மாறாக சாதாரன பொதுமக்களை துன்புறுத்தும் அத்தனை பேரும் தீவிரவாதிகள் தான். அவர்கள் எந்த மதத்தை முகமூடியாய் அணிந்து கொண்டாலும் சரியே என காலத்திற்கு மிக அண்மித்த கருத்தையும் அழகுறச் சொல்கிறது படம். இன்னும் எத்தனையோ சமூக அக்கறையை படம்பிடித்துக் காட்டுகிறது இந்த 'வானம்'.

5 வேறுபட்ட பாத்திரங்களின் வாழ்க்கையை தனித்தனியே காண்பித்து ஈற்றிலே அவ்வைந்து பாத்திரங்களையும் ஒரே புள்ளியில் இணைத்து, அந்த இணைப்பின் போது அந்தந்த பாத்திரங்களோடு சேர்த்து பார்வையாளன் மனதையும் கனப்படுத்தி வழியனுப்பி வைத்த இயக்குனரை பாராட்டியாக வேண்டும். அதே நேரம் இத்தகைய கருத்தாழம் மிக்க திரைப்படத்தை கூட தமிழ் சினிமாவுக்கான பிரத்தியேக திரை மொழியான சம்பந்தமே இல்லாத பாடல்களையும் சில காட்சிகளையும் சேர்த்துத்தான் வெளியிடவேண்டியதன் அவசியம் பற்றித்தான் அலச வேண்டியுள்ளது.

'வானம்' திரைப்படத்தில் 'எவன்டி உன்ன பெத்தான்..' என்ற பாடல் இடம் பெறுவதாகவும், இந்த பாடலை பதிவு செய்வதற்காக சுமார் 80 லட்சம் வரை செலவு செய்திருப்பதாகவுமே ஆரம்பத்தில் அதிகம் விளம்பரம் செய்யப்பட்டது. எனவே இதனடிப்படையில் இந்தப் படத்தை அவசியம் பார்க்க வேண்டியதில்லை என்பதாகவே நான் ஊகித்திருந்தேன். நண்பனின் கட்டாய அழைப்பின் பேரிலேயே பார்க்க வேண்டியேற்பட்டது என்பதால் படம் பார்த்து முடிந்ததும் ஆச்சரியமாக இருந்தது. இத்தகைய நல்ல படமொன்றிற்கு மக்களை வரவழைக்க 'எவன்டி உன்ன பெத்தான் பாடலை'... பிரதானப்படுத்தியா விளம்பரம் செய்வது? இவ்வாறான விளம்பர உத்தியின் மூலமாக தமிழ் ரசிகர்கள் பற்றிய இவர்களினுடைய கண்ணோட்டம்தான் என்ன? என எண்ணும் போது கவலையாக இருந்தது. மூலப்படமான வேதம் படத்திலில்லாத பாடல்களும் சில காட்சிகளும் தமிழில் இணைக்கப்பட்டிருப்பதும், இவையே இத்திரைப்படத்திற்கான தரத்தினை கேள்விக்குட்படுத்துவதாய் அமைவதென்பதுவும் எமது தமிழ் ரசிகர்கள் பற்றியோ அல்லது தமிழ் படைப்பாளிகள் பற்றியோ கூர்ந்து கவனிக்கச் செய்கின்றது. வானம் திரைப்படத்தில் வலிந்து திணிக்கப்பட்ட பாடல்கள்,காட்சிகள் இல்லாமலே மூலப்படமான தெலுங்குப்படம் மிகப் பெறும் வெற்றியடைகின்ற போது, இத்தகைய அம்சங்கள் இருந்தால்தான் தமிழில் வானம் வெற்றி பெறும் என்ற படைப்பாளியின் எதிர்பார்ப்பு பற்றி என்ன சொல்வது? நிச்சயம் இந்த சேர்ப்புகள் இல்லாமலே வானம் வெற்றி பெற்றிருக்கும் என்பது தான் உண்மை.

திரையரங்கில் படம் பார்க்கும் போது ரசிகர்களின் ரசிக்கும் பாங்கு என்னை திகைப்பில் ஆழ்த்தியதோடு, கலை, ஆன்மீகம், அரசியல் போன்றனவற்றில் பார்வையாளனின் நுண்ணிய அவதானம் ஏன் நடைமுறை வாழ்க்கையில் செயலற்றுப் போகிறது என்ற கேள்வியையும் எனக்குள் தொடுத்தது.

சிங் ஒருவனை விபத்திற்குள்ளாக்கிவிட்டு அதை பொருட்படுத்தாமல் காரில் சென்ற பரத் இன்னுமொரு அடிப்படைவாத கும்பலிடம் அகப்பட்டு அடிவாங்கிக்கொண்டிருக்கையில் தனக்குத் தீங்கிழைத்தவன் என்று தெரிந்தாலும் சிங் பரத்தை மன்னித்து பரத்தின் உயிரைக்காப்பாற்றும் காட்சியில் தியேட்டர் முழுதும் ஒரே அமைதி..பின்னர் அக்காட்சி முடியும் தறுவாயில் ரசிகர்கள் எல்லோரும் சிங் இன் செய்கையை தாமும் வழிமொழிவது போன்று மெதுவாக கைதட்ட ஆரம்பித்து பின்னர் பலமாக ஒருமித்து கை தட்டினார்கள். அதே போல் நடிகை சரண்யா தன் மகனை வட்டிக்காரனிடமிருந்து மீட்டெடுத்து பாடசாலைக்கு படிக்க அனுப்புவதற்காக தனது கிட்னியை விற்றுப் பெற்ற பணத்தை, சிம்பு பறித்துச் செல்கின்ற காட்சியில் சரண்யாவுடனும், அவரது மாமாவுடனும் சேர்ந்து ரசிகர்களும் அழுதார்கள். பின்னர் சிம்பு மனம் திருந்தி அவர்களிடம் தட்டிப்பறித்த பணத்தோடு தன்னிடமிருந்த மேலதிக பணத்தையும் சேர்த்து மீள ஒப்படைத்த போது திரையரங்கம் கைதட்டலால் நிறைந்திருந்தது. இத்தகைய காட்சிகளின் போது ரசிகர்களின் மனநிலை நீதி,தர்மத்தின் வழியே சரியான புரிதலை வெளிப்படுத்தியது. மேலும் சோனியா அகர்வாலின் கரு சிதைவுற்றதனால் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட மூவரும் அழுகின்ற காட்சியில் மதங்களைக் கடந்து மனிதம் நிறைந்த நிலையில் பார்வையாளனின் ரசிக்கும் திறன் இருந்தது.

ஒரு மத அல்லது இன அடையாளத்தோடு வன்முறையாளர்கள் இயங்குகின்ற போது குறித்த அந்த மதத்தையோ ,இனத்தையோ பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவரையுமே பயங்கரவாதிகளாகவே எண்ணிக் கொள்ளும் காவலதிகாரிகளின் நெருக்கடியான மனநிலையும், இதன் காரணமாக அப்பாவி பொதுமகனும் அவனது முழுக்குடும்பமுமே சிதைவுறும் அவலமும்,இத்தகைய நடவடிக்கைகளின் எதிரொலியாக சாதாரண பொதுமகனும் வன்முறை மனோநிலையை வரித்துக் கொள்ளும் அபாய நிலை ஏற்படுவதையும் காண்பிக்கும் போது எமது இலங்கை ரசிகர்கள் தமக்கு மிக மிக அண்மித்த விடயமாக அது இருக்கின்றமையை ஆழ்ந்து உணர்நததோடு;,எந்த மதத்தை சேர்ந்தவனாயினும் சரி அப்பாவி பொது மகன் பாதிப்புறக்கூடாது என்பதை ஏகோபித்து வரவேற்கும் விதமாக பிரகாஷ்ராஜ், காவலதிகாரி தொடர்பான காடசிகளின் போது பார்வையாளன் வெளிப்படுத்திய உணர்வு வெளிப்பாடுகள் இருந்தன. மேலும் படத்தின் இறுதிக்காட்சியில் 'வாழ்க்கைன்னா என்னதுன்னு ஒருத்தனோட சாவு சொல்லிக்கொடுத்திச்சு' என்று சொல்லும் விபச்சாரி அனுஷ்கா திருந்தி வாழ நினைக்கும் போது பணத்தை மையப்படுத்திய மனித வாழ்க்கையை மீள்வாசிப்பது பற்றிய மன நிலைக்குள் பார்வையாளன் மௌனித்துப் போனதையும் அவதானிக்க முடிந்தது.இதே போல்
படத்திற்கு அவசியமற்ற காட்சிகள் இடம்பெறும் போது சோர்வுற்ற சக ரசிகர்கள் சில பாடல் காட்சியின் போது சிற்றுண்டிச்சாலைக்குச் செல்லவும்,முனுமுனுக்கவும் செய்தார்கள்.

இந்த வானம் திரைப்படத்தை பார்த்த ரசிகர்களின் ரசணையை மோப்பம் பிடித்தது இன்னுமொரு உலகப் படம் பார்த்த உணர்வைத்தந்தது. அன்பையும், அரவணைப்பையும், பிறருக்கு உதவி புரிதலையும் வரவேற்று, வன்முறை மனோநிலையை அடியோடு ஒழிக்க நினைக்கும் ரசிகர்களின் உள்ளுணர்வுகளையும், ஒரு படத்தில் இயல்பு வாழ்க்கையின் பிரதிபலிப்பாக வரும் காட்சிகளோடு ஒன்றித்தும் செயற்கைத்தனமான காட்சிகளின் போது அவற்றைப் புறந்தள்ளும் விதமாய் சிற்றுண்டிச்சாலைக்கு செல்வதையோ, முணுமுணுப்பதையோ வாடிக்கையாக வைத்திருக்கும் ரசிகர்களின் உயர் ரசணையையும், படைப்பாளிகள் புரிந்து கொள்ள் முனைய வேண்டும். படைப்பாளிகள் தத்தமது வர்த்தக மனோ நிலைக்குள் ரசிகர்களின் ரசணையை மழுங்கடிக்கச் செய்யாதீர்கள். வர்த்தக நோக்கத்திற்காக மட்டும் தயாரிக்கும் திரைப்படங்களை உங்கள் இஸ்டத்திற்கு எடுப்பது தவறில்லை. மாறாக வானம் போன்ற நல்ல உள்ளடக்கம் கொண்ட திரைப்படங்களை அதன் இயல்பு கெடாமல் எடுக்க முயற்சி செய்யுங்கள். அப்போதுதான் எமது தமிழ்த்திரைப்படங்களும் உலகத்தரம் மிக்கதாக கருதப்பட்டு உலக விழாக்களை முற்றுகையிடத் தொடங்கும். மௌனத்திரைப்படங்களையே பல மணி நேரம் மல்லாந்து பார்க்கும் வகையில் ரசிகர்களை வழிநடாத்திய படைப்பாளிகளுக்கு நல்ல சினிமாவை மாத்திரம் ரசிக்கும் வகையில் ரசிகர்களை வழிநடாத்துவது அவ்வளவு சிரமமான காரியமில்லை. அது வரையில் ரசிகர்களின் ரசணையை குறைத்து மதிப்பிடாதீர்கள்.

Add-Tamil